பொலிஸ் பதிவுநடவடிக்கைகளை கொழும்பில் நிறுத்த முடியாதாம்! அமைச்சர் டிரான் அலஸ் திட்டவட்டம்

கொழும்பு வாழ் தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸாரால் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன எனவும் குறித்த விண்ணப்பபடிவங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் வழங்கப்படுகின்றன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சபையில் குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் அனைத்து தரப்பினரிடமும் இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தமிழ் மக்களின் வீடுகளில் மாத்திரம் இவ்வாறு நடப்பதாகப் பொய் கூறுகின்றார்.

கடந்த முறை இவ்வாறன குற்றச்சாட்டை முன்வைத்த போது தனிப்பட்ட ரீதியில் நான் அவருக்கு அனைத்து விடயங்களையும் தெளிவுப்படுத்தினேன்.

கொழும்பில் 90 வீத மக்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அதில் சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் என அனைவரும் இருக்கின்றார்கள்.

இன்றைக்கு நேற்றோ அல்லது நான் வந்த பிறகோ இந்தப் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை. வருடக்கணக்கான இவ்வாறு பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வேறு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் தவறு செய்துவிட்டு கொழும்பிற்கு வந்து வீடொன்றில் மறைந்திருந்திருக்கலாம் அல்லது கொழும்பில் இருந்து வேறு மாவட்டத்திற்குச் சென்றிருக்கலாம்.

இவ்வாறு நபர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதை அறிந்துக்கொள்வதற்காகவே நாங்கள் இந்தப் பதிவு நடவடிக்கையை முன்னெடுக்கின்றோம்.

அதில் எவ்வித தவறும் இல்லை. நாங்கள் மதம் குறித்துக் கேட்பதில்லை. இனம் குறித்து மட்டுமே கேட்கிறோம்.

இவருக்குத் தேவையென்றால் அனைத்து ஆவணங்களையும் கொண்டு வந்து கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்போம்.

இந்த பதிவு நடவடிக்கைகளை எம்மால் நிறுத்த முடியாது.

சிங்கள மொழியில் மாத்திரமே விண்ணப்பங்கள் இருப்பதாகக் கூறினால் அது குறித்து தேடிப் பார்த்து திருத்தங்களை மேற்கொள்கின்றேன். – என அவர் மேலும் தெரிவித்தார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.