தேர்தல் மூலம் தனது இருப்பை பாதுகாக்க ஜனாதிபதி முயற்சி! சிறிதரன் சுட்டிக்காட்டு

தேர்தல் தொடர்பான விடயங்களில் தனது இருப்பைப் பாதுகாக்கவே ஜனாதிபதி விரும்புகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடியதன் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘ஜனாதிபதிக்கு தேர்தல் வருத்தம் இருக்கின்றது. ஆனால் தேர்தல் நடக்காது. தேர்தல் நடக்கும் என்று சொல்வது ஜனாதிபதிக்கு ஒரு வருத்தமாக இருக்கிறது.

அவர் இவ்வாறு கூறி தனது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளப் பார்க்கின்றார்.

ஆனால் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் அரசமைப்பின் பிரகாரம் அவர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்.

அதை நடத்தினால் தான் அவர் ஏனைய தேர்தல்களைப் பற்றி சிந்திக்க முடியும்.

ஆனால் அவர் தேர்தலை நடத்தப் பயப்படும் நிலைமை காணப்படுகிறது. தேர்தலை என்றாலே விசர் நாய் தண்ணீரை கண்டது போல் பயப்படுகின்றார். ஆகவே அவர் தேர்தலை நடத்தவே மாட்டார்.

எதிர்வரும் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தேர்தல் ஒன்றை நடத்தியாக வேண்டும். அதன்பின் யார் ஜனாதிபதியாக வருகின்றார்களோ அவர் தேர்தலை பற்றி யோசிப்பார்.

ஆகவே இலங்கையில் தற்போதைக்கு வேறு தேர்தல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை.

ஏதேனும் அதிசயங்கள் அல்லது அழுத்தங்கள் இடம்பெற்றால் மாத்திரமே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.