அரசின் வருமான வரி அறவீடு வயது அடிப்படையில் கூடாது! காமினி வலேகொட
வயது அடிப்படையில் வருமான வரி அறவிட முடியாது வருமானத்தின் அடிப்படையில் வரி அறவிடப்பட வேண்டும் என தேசிய வரி வருமானச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக நிதியமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தமானியை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினால் இதுவரை பதிவு செய்யப்பட்ட வரி இலக்கங்கள் இரத்தாகும் நிலை ஏற்படும் என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் காமினி வலேகொட தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்கு அமைய 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பதிவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி வெளியிடப்பட்டுள்ளார்.
தேசிய வரி வருமான சட்டத்தின் 102 (1) மற்றும் 126(1) உறுப்புரிமைகளுக்கு அமைய வயது அடிப்படையில் வரி அறவிட முடியாது. வருமானத்தின் அடிப்படையில் தான் வரி அறவிடப்பட வேண்டும்.
வருடாந்தம் 12 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் பெறுவோரிடமிருந்து வருமான வரியை அறவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றீடாக நிதியமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
தேசிய வரி வருமான சட்டத்துக்கு அமைய வரி செலுத்துவோரை வேறுப்படுத்தும் அதிகாரம் நிதியமைச்சருக்கும், நிதியமைச்சின் செயலாளருக்கும் வழங்கப்படவில்லை.
வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பதிவு தொடர்பில் நிதியமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை தேசிய வரி வருமானச் சட்டத்துக்கு முரணானது.
ஆகவே இந்த வர்த்தமானியை எவரேனும் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினால் இதுவரையில் பதிவு செய்யப்பட்ட வரி வருமான இலக்கங்களை இரத்து செய்ய நேரிடும், எதிர்கால வரி இலக்க பதிவுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
நடைமுறையில் வரி வலையமைப்பு விஸ்தரிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே, தேசிய வரி வருமான சட்டத்தை திருத்தம் செய்து முறையான வழிமுறைகளுக்கு அமைய வரி செலுத்துவோர் தொடர்பில் பதிவுகளை முன்னெடுக்க வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை