தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அங்கீகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும்பெறவேண்டும்! 2009 பங்காளிகளை அழைக்கிறார் தலைவர் சிறிதரன்

2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறான நிலையை – தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும். எனவே, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ்க் கட்சிகளும் தம் காட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்த் தேசியத்தின் பாதையில் ஓரணியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்று புதிய தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்ட சிறீதரன், இந்தத் தேர்தல் தொடர்பிலும் தமிழரசுக் கட்சியின் எதிர்காலப் பயணப்பாடு தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எனது பெருவிருப்பம். அதனை முன்னிறுத்தியே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் நின்று, இப்போது தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன். இந்தநிலையில் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புத்துயிரூட்டுவதே என் முன்னுள்ள முதற்பணியென எண்ணுகிறேன்.

தமிழ் மக்களின் உரிமைக்காக, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பாக குரல் கொடுத்த, மக்களுக்காக அரசியல் பணி செய்த சக தமிழ்த்தேசியக் கட்சிகள் சில பல காரணங்களால் பிரிந்து தனிவழியே பயணிக்கின்றன. இது எமது பொது எதிரிக்கே சாதகமானது.

அதன் விளைவை கடந்த தேர்தல்கள் எமக்கு உணர்த்தியிருந்தன. 2009 இற்கு முன்னர் கூட்டமைப்பு எப்படி தமிழ் மக்களின் அசைக்கமுடியாத சக்தியாக மிளிர்ந்ததோ, அதே நிலையை மீண்டும் எட்டவேண்டும் என்பதே தமிழ்மக்களின் பெருவிருப்பம்.

எனது விருப்பமும் அதுவே. இப்போது அதற்கான காலம் கனிந்துள்ளது. இதற்காக அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும்  கடந்தகால கசப்பான நினைவுகளைக் களைந்து ஒன்றிணையுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

தமிழ் மக்களின் நலனுக்காகவும் தமிழ்த் தேசியத்தின் நலனுக்காகவும் ஓரணியில் ஒன்றித்திருப்பது எம்முன்னால் உள்ள பெரும்பொறுப்பு. அதற்காக தமிழரசுக் கட்சி மட்டுமல்லாது, சகல தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு உழைக்கவேண்டும். சகல தமிழ்த் தேசியக்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டை துரிதகதியில் முன்னெடுக்கவுள்ளேன். அதன் மூலம் மக்களின் உரிமைகளையும், மாவீரர்களின் கனவுகளையும்  வென்றெடுப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.