மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர் 137 ஆக அதிகரிப்பு…

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 61 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 31 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், கண்டி மாவட்டத்தில் 07 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கேகாலை மாவட்டத்தில் 03 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குருநாகல், மாத்தறை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 38 பேரும், வெளிநாட்டுப் பிரஜைகள் 03 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இன்று பிற்பகல் ஒரு மணிவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 254ஆகக் காணப்படுகின்றது. இவர்களில் 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய 156 பேரில் 88 பேர் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், 41 பேர் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையிலும், 09 பேர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும், 18 பேர் சிலாபம் – இரணவில கொரோனா சிகிச்சை நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைவிட நாடளாவிய ரீதியில் 22 வைத்தியசாலைகளில் மேலும் 122 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.