தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரின் நிதியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அன்றாடம் தொழில்புரிந்து வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தும் குடும்பங்களின் அன்றாட வாழ்வு நலிவடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான உதவிகளைப் பல்வேறு தரப்பினரும் செய்துவருகின்றனர்.
அந்தவகையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கத்தின் நிதிப் பங்களிப்பின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பின்தங்கிய பிரதேசங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு-2 பிரதேச முதியோர் சங்க உறுப்பினர்களுக்கு மேற்படி உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் அவரின் பிரத்தியேகச் செயலாளரான தாமோதரம்பிள்ளை தங்கவேலால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேசத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணித் தலைவர் லோ.தீபாகரன், ஆறுமுகத்தான் குடியிருப்பு காளி கோவில் நிருவாகத்தினர், முதியோர் சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதுவரையில் கி.துரைராசசிங்கத்தின் நிதியின் மூலம் வந்தாறுமூலை, பாவற்கொடிச்சேனை, வாகரை, வடமுனை, முள்ளிவெட்டுவான், வாகனேரி, புணானை, சின்ன மியான்கல், பெரிய மியான்கல், கிரான், வாழைச்சேனை, நாசிவன்தீவு, கல்குடா, பன்குடாவெளி, சித்தாண்டி, செங்கலடி, ஏறாவூர் 05, தன்னாமுனை, புதுக்குடியிருப்பு, தாழங்குடா போன்ற பல பிரதேசங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை