தனியார் பேருந்து நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் – கோட்டா
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதுடன், தனியார் பேருந்து நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பேருந்துகளின் பயண நேரசூசி தொடர்பாக இருந்துவரும் நீண்ட கால பிரச்சினையை விரிவாக ஆராய்ந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியன இணைந்து பயண நேரசூசியொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அதற்கான தகவல்களை காலம்தாழ்த்தாது ஆராய்ந்து பிரச்சினையை தீர்க்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
நாளாந்தம் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 07 விபத்து மரணங்கள் சம்பவிப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு தனியார் பேருந்துகளே பொறுப்பு என்பதும் தெரியவந்துள்ளது. இது பற்றி கூடுதல் கவனம் செலுத்தி விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பல்வேறு காரணங்களினால் சில தரப்பினருக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணம் செலுத்த வேண்டியிருப்பதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.
இது பற்றி மேலும் கேட்டறிந்த ஜனாதிபதி, அத்தகைய கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
போக்குவரத்து சபை பேருந்துகள் போன்று தனியார் மற்றும் பாடசாலை பேருந்துகளுக்கும் தனியான நிறத்தை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொவிட் 19 ஒழிப்பு சுகாதார பிரிவு வழங்கியுள்ள பரிந்துரைகளை பின்பற்றி ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பயணிகள் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறை ஆரம்பமாகும் வேலை நேரங்களை திருத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் பழுதடைந்துள்ள பேருந்துகளை திருத்துவதற்கு 3 லட்சம் ரூபா கடன் வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பேருந்துகளை ஓய்வுக்காக நிறுத்தும் சிற்றுண்டிச்சாலைகளின் சுத்தம் பற்றியும் மிகவும் விழிப்பாக இருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.
பயணிகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவமளித்து உயர் நியமங்களுடன் கூடிய பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை