குத்தகை நிறுவனங்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- சுரேன் ராகவன்

நாடளாவிய ரீதியாக இயங்கும், சட்டபூர்வமற்ற குத்தகை நிறுவனங்களை தடை செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். சுரேன் ராகவன் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் சபையினால், 1948 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாநாட்டில், அனைத்து மக்களுக்கும் வாழும் உரிமை உறுதி செய்யப்பட்டது.

ஆனால், இன்று இந்த உரிமை கேள்விக் குறியாகியுள்ளது. இதனை அகில இலங்கை முச்சக்கரவண்டி சேவையாளர் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் படுகொலை வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது.

மத்திய வங்கி தனது வேலையை சரியாகத்தான் செய்கிறதா எனும் கேள்வி இன்று எழுந்துள்ளது. பொலிஸ், நீதிமன்றங்கள் என அனைத்தும் செயழிளந்துள்ளன. இன்று நாட்டில் பாதாளக் குழுவினரின் நடமாட்டம்தான் அதிகரித்துள்ளது.

இதுதான் நாட்டில் நடக்கிறது. மக்களின் உரிமையை மீறி எவராலும் அரசியல் மேற்கொள்ள முடியாது. நான் வடக்கின் ஆளுநராக இருக்கும்போது, 63 குத்தகை நிறுவனங்களை தடை செய்திருந்தேன்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், இளைஞர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு இந்த குத்தகை நிறுவனங்களால், நூற்றுக்கு 60 வீத அதிக வட்டிக்கு கடன் கொடுக்கப்பட்டது.

இதனால், மக்களின் வாழ்க்கையே பாதிக்கப்பட்டது. இதனால், நான் மத்திய வங்கி ஆளுநருடன் அப்போது கலந்துரையாடி இந்த நிறுவனங்களை தடை செய்தேன்.

இவ்வாறு இப்போதும் மேற்கொள்ள முடியும். சட்டரீதியற்ற ஒரு குத்தகை நிறுவனத்தை தடை செய்யும் அதிகாரம் மத்திய வங்கிக்கு உள்ளது.

எனவே, இதுதொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் தரப்பு உறுப்பினர்களின் அளுத்தம் இதில் விடுக்கப்பட வேண்டும்.

இது அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஒரு நாட்டுக்குள் ஒரு சட்டம் தான் நடைமுறையில் இருக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.