வன்னி பிரதேச வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்-காதர் மஸ்தான்
இன்றைய நாள் எமது வன்னி பிரதேச வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும் என நான் பதிவு செய்ய
ஆசைப்படுகிறேன். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சௌபாக்கியத்தை நோக்கி எனும் இலக்கை நோக்கிய எமது பயணத்தில் இது மற்றுமொரு மைற்கல்லாகும். என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.
நேற்று வவுனியா பெரிய தம்பனை ஆலடிக்குளம் புனரமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது
தேசிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்ற போது அதன் பெரும்பாகம் விவசாயம், நீர்ப்பாசனம், நீர் மின்வலு துறைகளின் பங்களிப்பு ஆகிய வெற்றிகரமான செயற்றிட்டங்கள் மூலம் கிடைக்க பெறுகின்றன.
இதற்காக நாடு பூராகவும் பரந்து விரிந்து கிடக்கின்ற ஆறுகள், குளங்கள், கால்வாய்களை சீரமைப்பதன் மூலம் அத்துறை சார்ந்த செயற்றிட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் நாடெங்கும் சௌபாக்கியத்தையும், செழுமையையும் உண்டாக்குவதே எமது பணியாகும். இதன் மூலம் எமது நாட்டின் முதுகெலும்பாக செயற்படுகின்ற விவசாயிகளுக்கு வலுச் சேர்ப்பதே இதன் பின்னணியாகும்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னராக எமது நாட்டில் கையாளப்பட்டு வந்த நீர்பாசன தொழிநுட்பம் சார்ந்த எமது விவசாய நடவடிக்கைகளானது சர்வதேச விவசாய துறையினுள்ளே ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. உலக கைத்தொழில் புரட்சிகளுக்கு முன்னர் எவ்வித இயந்திர தொழிநுட்பமும் இல்லாத காலத்தில் எமது நாட்டிலே உருவாக்கப்பட்டிருக்கின்ற குளங்களும், நீர்பாசன கட்டமைப்புக்களும் இன்றுவரைக்கும் எவ்வித தடங்கள் ஏதுமின்றி செயற்பட்டுக் கொண்டிருப்பது அவற்றை பறைசாற்றுகிறது.
எனவே அவ்வாறான கட்டமைப்புக்களை புனரமைப்பதன் மூலம் எமது விவசாயத்துறையை மேலும் வலுப்படுத்தி கிராமிய தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்றார் .
கருத்துக்களேதுமில்லை